
தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. காலை 10:00 மணிக்கு, 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர், “இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். எவ்வளவு தடைகள் வந்தாலும், சமநிலையை பேணிச் செயல்படுவோம்” எனக் கூறினார்.
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதனால், புதிய அரசு பதவி ஏற்பதற்கு முன்பு, இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பின், முழு பட்ஜெட் தாக்கல் செய்யும். எனவே, இந்த பட்ஜெட், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: தமிழக பட்ஜெட் மக்களுக்கு விரைவாகப் பரப்பு!
2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட், மாநிலம் முழுவதும் 936 முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
🔹 சென்னை மாநகராட்சி – 100 இடங்கள்
🔹 மற்ற 24 மாநகராட்சிகள் – 48 இடங்கள்
🔹 137 நகராட்சிகள் – 274 இடங்கள்
🔹 425 பேரூராட்சிகள் – மாநிலம் முழுவதும்
பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மக்கள் அனைவரும் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் அரசாங்கம் இந்த முயற்சியை மேற்கொண்டது.
இதே நேரத்தில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.