மேற்கு வங்கத்தில் ஜி.பி.எஸ். (Guillain-Barré Syndrome – GBS) எனப்படும் கீலன்பா சிண்ட்ரோம் நோயால், ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதே நோயால் மஹாராஷ்டிராவிலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படும் போது, ஜி.பி.எஸ். நோய் உருவாகும். வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா தாக்கத்துக்குப் பிறகு, நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவுக்குள்ளானால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் தாக்கும் போது, உடலின் பல பகுதிகளில் உணர்ச்சி குறைவு, தசை பலவீனம், செயலிழப்பு உள்ளிட்ட குறைபாடுகள் காணப்படும். இதனால், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம்.
மஹாராஷ்டிராவின் புனேவில், ஜி.பி.எஸ். நோயால் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சொந்த ஊரான சோலாபூரில் உயிரிழந்தார். மேலும், புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மஹாராஷ்டிராவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவ்குமார் சாஹு (10), அரித்ரா மனால் (17) மற்றும் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது ஆண் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள், இவர்கள் அனைவரும் ஜி.பி.எஸ். பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.