
கேரளா மாநிலத்தின் வயநாடு மற்றும் வைத்திரி வனப்பகுதிகளில் மூன்று புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று புலிகளின் உடல்களை மீட்டு தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வயநாட்டில் குறிச்சியாத் வனப்பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன. மற்றொரு புலி வைத்திரி பகுதியில் உள்ள காப்பி தோட்டம் அருகே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. புலிகள் இயற்கையாகவே இறந்தனவா, அல்லது வேறு ஏதாவது காரணங்களால் உயிரிழந்தனவா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தனிப்படை விசாரணை தொடக்கம்
இந்த மர்மமான சம்பவத்தின் பின்னணி குறித்து முழுமையான தகவல்களைச் சேகரிக்க, வனத்துறை அமைச்சர் சுசீந்திரன், எட்டு பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்துள்ளார். வன பாதுகாவலர் தீபா தலைமையில் செயல்படும் இந்த குழு, புலிகளின் மரணத்திற்கான காரணங்களை விசாரித்து, ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித-வன உயிரின மோதலின் தாக்கம்?
சமீபத்தில், வயநாட்டில் ஒரு பழங்குடியினப் பெண் காப்பி கொட்டைகளை பறிக்கும் போது, புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணைக் கொன்ற புலி, இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவத்திற்கும் தற்போதைய புலி மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரணை குழு ஆராயவுள்ளது.
இந்த சம்பவம் வன உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கிடையேயான மோதல்களைப் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. புலிகளின் மரணத்திற்கு பின்புலம் என்ன? இதனால் øவன உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? என பல்வேறு கோணங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.