Thursday, July 31பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Primary Health Centres – PHC) 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மருத்துவர் அலட்சியத்தால் உயிரிழந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தை சேர்ந்த தேவமணி, தனது மகள் சுப்புலட்சுமி கடந்த 2021ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, அவளை முருகேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது சிகிச்சை வழங்கியபோது, அவரது மகளுக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை தொடர முடியாத நிலை காரணமாக, பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டதால், அவளை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால், ஆம்புலன்ஸில் பணியாற்றிய செவிலியர்கள் மனிதாபிமானம் இன்றி, “முதலில் ரத்தம் சிந்திய இடத்தை துடைத்து விட்டுத் தான் கொண்டு செல்லமுடியும்” என நிர்ப்பந்தித்தனர். இதன் விளைவாக நேரம் வீணாகியது. அந்த 8 மாத கருவில் இருந்த குழந்தை உயிரிழந்தது. இதனால் சுப்புலட்சுமி உடல் மற்றும் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் என தேவமணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், சமூக நலன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநரிடம் விரிவான அறிக்கையை கோரினார். அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லாததால், பாதிக்கப்பட்ட தரப்பும், மருத்துவப் பணியாளர்களும் நேரில் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் போது, ரத்தக்கறையை துடைக்க நிர்ப்பந்தித்தவர் செவிலியர் முத்துலட்சுமி என்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால், சுப்புலட்சுமி அளித்த முக்கியமான தகவல்கள், சுகாதாரத் துறையின் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதும் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த வழக்கை முடிவுறுத்தும் வகையில், மனித உரிமைகள் ஆணையம், “குழந்தையை இழந்த சோகத்திற்கும், ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் இழப்பீடாக, தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்” எனக் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் செயல்பட, தேவையான எண்ணிக்கையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், அரசு அவசியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு, மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ வசதிகளின் தரத்தை மேம்படுத்தும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சுகாதாரத்துறையில் மனிதாபிமான அணுகுமுறை மிக முக்கியம் என்பதை மீண்டும் நினைவூட்டும் சம்பவமாக இது அமைந்துள்ளது.