Monday, January 5பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகல தொடக்கம்!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 3) கோலாகலமாக தொடங்கியது.

தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது. குறிப்பாக, அதிகப்படியான வாடிவாசல்கள் அமைந்துள்ள மாவட்டம் என்ற பெருமையும் இதற்கே உண்டு. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக் கோரி, கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, போட்டிக்கான முன்னேற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள், காளைகளின் உடல்நலச் சோதனை, மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் விதிமுறைகளுக்கு ஏற்ப தயாராக உள்ளதை உறுதிப்படுத்திய பின்னர், தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

அதன்படி, இன்று தச்சங்குறிச்சியில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் மொத்தம் 900 காளைகள் பங்கேற்றுள்ளன. அவற்றை அடக்க 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

பாரம்பரியம், வீரியம், விழாக்கோலம் ஆகியவை ஒருங்கிணைந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி, தச்சங்குறிச்சியில் பெருந்திரளான பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி, 2026 ஆம் ஆண்டின் ஜல்லிக்கட்டு திருவிழாக்களுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது.